மதுரை: ''கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதா நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரிகமாக இருக்காது என்பதால்தான் இதுவரை சொல்லவில்லை,'' என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இது குறி்த்து அவர் மதுரையில் கூறியது: ''ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்தச் செய்தி சென்றுவிடக் கூடாது. ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இருந்தபோது தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்தான் அதிகாரம் மையம் என்று கட்சியினர் சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்துக்கு அவரை தள்ளி வைத்துவிட்டு இந்த சாமானிய தொண்டரான இந்த உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.