ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியது.