ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெய்ப்பூர் மேற்கு டிசிபி அமித் குமார் இன்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ளார்.
ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதியது.