பெர்லின்: ஜெர்மனியில் கடந்த நவம்பரில் 3 கட்சிகள் கொண்ட ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார். இதனால் 7 மாதங்கள் முன்கூட்டி பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கன்சர்வேடிவ் கூட்டணி 28 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்தது. இதனால் மெர்ஸ் ஜெர்மனியின் அடுத்த அதிபர் ஆக உள்ளார்.
மொத்தம் 630 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி 208 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதே சமயம் ஆலிஸ் வெய்டல் தலைமையிலான தீவிரவலது சாரி கட்சியான ஆல்டர்நேட் பார் ஜெர்மனி கட்சி 152 இடங்களை பிடித்து 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. கட்சி தொடங்கி 12 ஆண்டில் இது அக்கட்சியின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். முன்னாள் அதிபர் ஓலாப் ஸ்கோல்சின் சோசியல் டெமாக்ரடிக் கட்சி 120 இடங்களை மட்டுமே பிடித்து தோல்வி அடைந்தது. கிரீன் கட்சி 85 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஓலாப்பின் சோசியல் டெமாக்ரடிக் கட்சியுடன் இணைந்து பிரெட்ரிக் மெர்ஸ் ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஜெர்மனி பொதுத் தேர்தல் கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி appeared first on Dinakaran.