தண்டராம்பட்டு : ஞாயிறு விடுமுறை காரணமாக நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன்விழா கண்ட சிறப்புக்குரியது.
இங்கு ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப்பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை காரணமாக நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, தொங்கு பாலம், டைனோசர் பார்க், அறிவியல் பூங்கா, நீச்சல் குளம், முதலைப்பண்ணை, மயில் கூண்டு, பறவைகள் கூண்டு, செயற்கை நீரூற்று, காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் மற்றும் கோரையாறு, பாம்பாறுகளில் இருந்து சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3,333 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் 102.10 அடியாக இருந்தது.
The post ஞாயிறு விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.