சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால் இங்கு நடக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியோ, ஜனநாயக உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுபூர்வமாகப் போராடினால், காவல் துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்தி வருகிறது.