மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து குறித்த அறிவிப்பை ஒன்றிய அரசிடம் இருந்து இன்று எதிர்பார்த்து காத்திருப்பதாக மேலூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு ஏலமிட்டது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி வல்லாளபட்டியல் போராட்டக்காரர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இத்திட்டம் ஒன்றிய சுரங்கதுரை அமைச்சர் கிஷன் ரெட்டி மூலம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவருடன் நேற்று டெல்லி சென்ற டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பாளர்கள் கிஷன் ரெட்டியை சந்தித்து சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதை அடுத்து சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் மகிழ்ச்சியான அறிவிப்பு நேற்று வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதை எதிர்பார்த்து காத்திருந்த மேலூர் பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட தயாராக இருந்தனர்.
ஆனால் எந்த அறிவிப்பும் வராத நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை டங்ஸ்டன் போராட்ட குழுவுக்கு பாஜக அளித்த உறுதி மொழியை கைவிடவில்லை என்றும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்னு வெளியாகும் என்றும் தெரிவித்தார். இதை அடுத்து அந்த அறிவிப்புக்காக காத்திருப்பதாக முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமமக்கள் ஒன்றிய அரசு வெறும் அறிவிப்பாக இல்லாமல் எழுத்து பூர்வமாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து குறித்த அறிவிப்பு வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் : ஒன்றிய அரசுக்கு போராட்டக்காரர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.