மதுரை: ‘டங்ஸ்டன் ’ திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், 15 கி.மீ நடைபயண போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி துவங்கி தல்லாகுளம் தபால் நிலையம் வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய சுமார் 5 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராமமக்கள், விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.