மதுரை: “மக்களின் போராட்டம் மற்றும் பேரவை தீர்மானத்துக்கு பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என அ.வெள்ளாலப்பட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை – மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவதாக மக்கள் அறிவித்தனர்.