விக் ஆன் ஜீ: நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் 12 சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான டி.குகேஷ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். கடைசி மற்றும் 13-வது சுற்றில் குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசியிடமும், பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடமும் தோல்வி அடைந்தனர்.
இதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கரில் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினார்கள். இதன் முதல் ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் குகேஷ் செய்த தவறை சரியாக பயன்படுத்திக் கொண்டு மீண்டு வந்து பிரக்ஞானந்தா வெற்றியை வசப்படுத்தினார். இதனால் பிளிட்ஸ் கேம் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற சடன்டெத் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முடிவில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.