சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இவற்றுடன் சேர்த்து புதிய உறுப்பினர்களான ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகியவையும் பிரிக்ஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளின் கூட்டணி அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கவோ அல்லது ஏதாவது ஒரு கரன்சியை மாற்றாக கொண்டு வர மாட்டோம் என்கிற உறுதிமொழியை அவர்கள் அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பிரிக்ஸ் கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.