*விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
கரூர் : ஒரு சில டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக்பொருட்கள் தேக்கி வைப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. கரூர் மாநகராட்சியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், பெரும்பாலான கடைகளின் அருகில் பார் செயல்படுகிறது. சில கடைகளில் பார் வசதியின்றி செயல்படுகிறது.
கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர், திருமாநிலையூர் போன்ற பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் விவசாய நிலங்களின் அருகில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இதேபோல், செல்லாண்டிபாளையம், வெங்கமேடு போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
மேலும், கரூர் மாநகராட்சி பகுதியை தாண்டி வாங்கல் சாலை, திருச்சி சாலை, வெள்ளியணை, கோடங்கிப்பட்டி சாலை போன்ற பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் விவசாய நிலங்களின் அருகில்தான் செயல்படுகிறது.
தினமும் இதுபோன்ற நகரப்பகுதிக்கு அடுத்து விவசாய நிலங்களின் அருகில் செயல்படும் டாஸ்மாக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து ஹாயாக சரக்கு அடித்து விட்டு பாட்டில்கள், கப், பிளாஸ்டிக்பொருட்கள் போன்ற அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர். விட்டுச் செல்லப்படும் இந்த கழிவுகளில் மேயும் கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
மழையின் காரணமாக பாட்டில்கள், பிளாஸ்டிக்பொருட்கள், வாட்டர் பாட்டில்கள் போன்றவை மண்ணோடு மண்ணாகி மக்கி, பிற்காலங்களில் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது.
மாநகரப்பகுதியை சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளை போலவே, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளும் விவசாய நிலங்களின் அருகில்தான் செயல்படுகிறது. இதேபோன்ற நிகழ்வுகள் அந்தந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுவதால் மாவட்டம் முழுவதும் இதே பாதிப்பு என்ற நிலைதான் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குடித்தால், கழிவுப்பொருட்கள் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது. ஆனால், வெளிப்பகுதிகளில் விவசாய நிலங்களில் அமர்ந்து குடிப்பதால் நிலங்களின் தன்மைதான் கடுமையாக பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் தாக்கம் இப்போது தெரியாது, வரும் காலங்களில் இதன் தாக்கம் அதிகம் என்பதால், இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விளைநிலம் மற்றும் விவசாய நிலங்களில் தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவற்றினால் நிலங்கள் மட்டுமின்றி, நிலங்களின் மேய்ச்சலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளும் இதன் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேய்யசலுக்கு செல்லும் கால்நடைகள் மட்டுமின்ற, அனைத்து பகுதிகளில் சுற்றித்திரியும் மற்ற விலங்குகளும் குடிமகன்களில் செயலால் கடுமையாக பாதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருர்- திண்டுக்கல் சாலை பத்தாம்பட்டி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் அனைத்தும் ஒரு மரத்தின் அடியில் மொத்தமாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவை சில மாதங்களாக அள்ளப்படாமல் உள்ளது எனவும் கூறப்படுகிறது.பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக கால்நடைகள் மற்றும் நிலங்கள் அதிகளவு பாதிக்கப்படும் என்பதால் இந்த பகுதியில் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களையும் உடனுக்குடன் அப்புறப்படுத்தவேண்டும் எனவும் பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த, தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
The post டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கி வைப்பதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.