சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக அமலாக்க துறை சோதனை நடத்தி வருவதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக 3வது நாளாக அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய பாஜ அரசு, அமலாக்க துறை வருமானவரி துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அந்துகீறலில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை என்பதன் பெயரில் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை வலிந்து திணிப்பதையும், பள்ளி கல்வித்துறைக்கும் பேரிடர் நிவாரண பணிக்கும் மற்றும் வேலை உறுதியளிப்பு திட்ட ஊதிய பாக்கி தொகையினையும் வழங்க மறுத்து வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு ஒருமுகமாக எதிர்த்து வரும் சூழலில் அமலாக்க துறையின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், மதுபானங்கள் வைப்பு மைய குடோன், முன்னாள் மதுவிலக்கு இணை ஆணையர் வீடு என அரசு அலுவலகங்களில் அமலாக்க துறை சோதனையில் ஈடுபட்டு மிரட்டும் செயலில் ஈடுபட்டதை கடுமையாக ஆட்சேபிக்கிறது. வழக்கு தொடர்பான விசாரணை எல்கையை தாண்டி, உயர் அதிகாரிகளையும் பணியாளர்களை உளைச்சலுக்கும் பதற்றத்துக்கும் ஆளாக்கி வரும் அமலாக்க துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறது.
The post டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக அமலாக்க துறை சோதனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.