சென்னை: “டாஸ்மாக் ஊழலுக்குக் காரணமான மதுவிலக்குத் துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழலில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், மூலக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பது மட்டுமின்றி, அதிலும் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சொத்துகளைக் குவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.