புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கட்ஸ்'. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்துள்ளார். ஓபிஆர்பி புரொடக் ஷன்ஸ்சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்துள்ளார். இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நடிகரும் இயக்குநருமான ரங்கராஜ் பேசும்போது, “நடிகனாக வேண்டும் என்று 25 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் மன உளைச்சலாகி விலகி விடலாம் என தீர்மானித்தேன். அப்போது என் நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள். குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரிக்க முடியும் என்றார்கள். இது எனக்கு நம்பிக்கையை தந்தது. பிறகு நானே தயாரிக்கத் தொடங்கினேன். எனக்கு சினிமா பின்னணி கிடையாது. கடைக்கோடி கிராமம் ஒன்றில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் அம்மாவின் மகன் நான். இன்று நடிகனாகி விட்டேன். இதை என்னாலேயே நம்ப முடியவில்லை. இந்தப் படத்துக்காக நிறைய நண்பர்கள் எனக்கு உதவினார்கள். தியேட்டரில் டிக்கெட் விலையை குறைத்தால் சிறு முதலீட்டுப் படங்களும் வெற்றி பெறும்” என்றார்.