கீவ்: டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்பு கொண்டுள்ளன. ஆனால் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர்.
சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது, கடந்த மூன்றாண்டுகளாக உக்ரைனில் இருந்து ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள ரஷ்ய படைகளை திரும்ப பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால் அப்போது டிரம்ப் முன்வைத்த 30 நாள் முழுமையான போர் நிறுத்தத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதேசமயம், போர் நிறுத்த ஒப்பந்தப்படி, உக்ரைனும், ரஷ்யாவும் ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்ற டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். ஆனால் ரயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்துகிறது. டிரம்ப், புடின் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு மருத்துவமனை, குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த சூழலில் குறுகியகால போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால் இதுஎப்போது நடைமுறைக்கு வரும் என்ற உறுதியான தகவல்கள் வௌியாகவில்லை.
The post டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் – ரஷ்யா ஒப்புதல் appeared first on Dinakaran.