உதகை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்துக்கு ஊடாகவும், ஆறுகளுக்கு குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. செங்குத்து மலைச்சரிவில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில், நீலகிரி மலை ரயில் பாதை நிறுவப்பட்டுள்ளது.
‘யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூற்றாண்டுகளை கடந்து நீராவி மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரி மூலமாகவே இயக்கப்பட்டது. தொடக்க காலத்தில், ‘எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன.