சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் 1.5 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி, “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் 2011-2012 ஆண்டுக்கு பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிர்யர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.