புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் செயற்கை மழைக்கு அனுமதி அளிக்குமாறு மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபல் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி காற்று மாசு தொடர்பாக அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் தலையிடுவது பிரதமர் மோடியின் பொறுப்பு என்று கூறினார்.
செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கோபால் ராய், "தேசிய தலைநகரில் செயற்கை மழைக்கு அனுமதிக்குமாறு டெல்லி அரசு தொடர்ச்சியாக பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு நவடிக்கை எடுக்கவில்லை. நான் மீண்டும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுத உள்ளேன். டெல்லியில் GRAP Stage IV கட்டுப்பாடு உள்ளது. வாகன மற்றும் தொழிற்சாலை புகையைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில், தனியார் மற்றும் லாரிகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.