புதுடெல்லி: தலைநகர் தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த வாரம் டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா குளோபல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. அதற்கும் முன்னதாக டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்த பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றுவட்டாரத்துக்குள் குறைந்த சக்தி கொண்ட மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் போது அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் செய்யப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.