புதுடெல்லி: மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவினி யோஜனா ஆகிய இரண்டு புதிய நலத்திட்டங்களுக்கான பயனாளர்கள் பதிவு நாளை (டிச.23) தொடங்கும் என்று டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது தாய்மார்களும் சகோதரிகளும் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். பலர் வெளியில் வேலை செய்து தங்களின் குடும்பத்தினை நிர்வகிக்கிறார்கள். இந்த ரூ.2100 நமது மகள்கள் தங்களின் கல்லூரிப்படிப்பினை முடிக்க உதவி செய்யும். குடும்பத்தலைவிகளுக்கு அதிகரிக்கும் அவர்களின் குடும்பச் செலவுகளை சமாளிக்கவும், சேலை மற்றும் ஆடைகள் வாங்கவும் தங்களுக்கான தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும்.