சென்னை: பஞ்சாப் ஜலந்தரில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர். ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் தமிழ்நாட்டு மாணவர்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்தடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தமிழ்நாட்டு மாணவர்கள் பயிலும் நிலையில், முதல் பகுதியாக 5 மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், பஹல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது. உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார்.
அதன்படி, உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 (வாட்ஸ் அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த 52 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்துவர முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முடக்கம் மற்றும் சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்துவருவதற்கான சூழ்நிலை இல்லாததால் நிலைமை சீரானதும் மாணவர்களை அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் டெல்லி அழைத்துவரப்பட்ட 5 மாணவர்களும் சென்னை திரும்பினர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் 5 மாணவர்களும் சென்னை அழைத்து வரப்பட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். உதவி எண் மூலம் அழைத்ததும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
The post டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.