புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "டெல்லிக்குள் லாரிகள் நுழைவதற்குத் தடை, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு முழுத் தடை உள்ளிட்ட கடுமையான மாசுக் கட்டுப்பாடுகள், டெல்லி மற்றும் என்சிஆரில் தொடரும். GRAP (கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் பிளான்) IV நடவடிக்கைகள் தொடர்வது குறித்த கேள்வியை திங்களன்று நாங்கள் பரிசீலிப்போம். இது தொடர்பாக நவம்பர் 18 அன்று உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அமல்படுத்துவது திருப்திகரமானதாக இல்லை. எனவே, டெல்லியின் நுழைவு இடங்களில் நீதிமன்ற தடையை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய 13 வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள்" என உத்தரவிட்டுள்ளது.