புதுடெல்லி: டெல்லியின் முதல்வருக்கான பங்களாவான 6, ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அக்கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக, டெல்லி முதல்வர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சர் குளம், மினி பார் உள்ளதாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்ற கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பங்களாவுக்குள் நுழைய முயன்றனர்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் டெல்லியின் முதல்வராக இருந்தபோது அவரது அதிகாரபூர்வ இல்லமாக இருந்த அந்த பங்களாவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் பங்களாவுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது 6 ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை பங்களா, பல கோடி ரூபாய் செலவில் மிகவும் ஆரம்பரமான வகையில் புதுப்பிக்ப்பட்டது. அப்போது அது ஷீஷ் மஹாலாக மாற்றப்பட்டது என்று பாஜகவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த பங்களா பெரும் கவனம் பெற்றது.