புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்துள்ளவர் என்றும், டெல்லியின் வளர்ச்சிக்காக முழுவீச்சில் பாடுபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, கல்லூரி வளாக அரசியல், மாநில அளவிலான கட்சிப் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலன் அளிக்க எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.