சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர், அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் வெறும் 10 மட்டுமே. தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் தொடரின் கடைசி போட்டியான சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆடும் லெவனில் ரோஹித் இடம்பிடிப்பது குறித்த எதுவும் சொல்லாமல் கடந்து சென்றார் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர்.