புதுடெல்லி: உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 200 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். உத்தராகண்ட்டின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்தனர்.
உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. டேராடூனின் பவுண்டா எனும் பகுதியில் உள்ள தேவபூமி கல்வி நிறுவனத்தில் பயிலும் 200 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர் கனமழை காரணமாக இப்பகுதியில் பல்வேறு சாலைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன.