குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு அருகே முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை‌யை ட்ரோன் கொண்டு விரட்டியதால் ஊட்டி தொட்டபெட்டா சிகரம் பகுதிக்குள் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தற்போது கோடை மழை பெய்ததால் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைப்பதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர் நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கரிமரா ஹட்டி மற்றும் பழத்தோட்டம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்தது. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரிவதால் தேயிலை தோட்டத்துக்குச் செல்ல முடியாமல் தொழிலாளர் அவதியடைந்தனர். மேலும், யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.