திருச்சி: திருச்சியில் நடைபெற்ற 8 மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘ட்ரோன் மூலம் சர்வே செய்து வரி வசூலிக்கக் கூடாது’ என பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கில் இன்று (பிப்.21) நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், மேயர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கைகளை அமைச்சரிடம் மனுவாக வழங்கி பேசினர்.