சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் இதுதொடர்பாக என்ஐஏ ஏற்கெனவே ஒருமுறை சோதனை நடத்தியுள்ளது.