புதுடெல்லி: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதாரை கட்டாயமாக்கி ரயில்வே புதிய விதிமுறை கொண்டு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு பெட்டிகளுக்கான டிக்கெட்டை 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். மேலும், பயணத்திற்கு ஒருநாளுக்கு முன்பாக தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த தட்கல் முன்பதிவில் பல முறைகேடுகள் நடப்பதாகவும், பெரும்பாலான பயணிகளால் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் அடிப்படையில் ஐஆர்சிடிசி சமீபத்தில் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கவும், மோசடிகளை தடுக்கவும் ஜூலை 1 முதல் ஆதாரை கட்டாயமாக்கி ரயில்வே அமைச்சகம் புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, தட்கல் டிக்கெட் முன்பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
* வரும் ஜூலை 1ம் தேதி முதல், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலியில் ஆதார் எண்ணை இணைத்து உறுதிப்படுத்திய பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
* ஜூலை 15 முதல், தட்கல் முன்பதிவின் போது, பயணிகளின் செல்போனுக்கு ஆதார் மூலமாக ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி எண் சரிபார்க்கப்பட்ட பின்னரே தட்கல் முன்பதிவு செய்ய முடியும். ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட கவுண்டர்களில் நேரடியாக தட்கல் முன்பதிவு செய்யும் பயணிகள் மற்றும் ரயில்வே டிக்கெட் முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் அவர்களின் செல்போனில் பெறப்பட்ட ஆதார் அடிப்படையிலான ஓடிபி எண்ணை வழங்கிய பிறகே டிக்கெட் முன்பதிவாகும்.
* ரயில்வேயின் அங்கீகாரம் பெற்ற டிக்கெட் முகவர்கள் தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் அரைமணி நேரத்திற்கு டிக்கெட்டை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது, ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், டிக்கெட் முகவர்கள் காலை 10.30 மணிக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் பெற முடியும். ஏசி இல்லாத பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில், முகவர்கள் காலை 11.30 மணிக்கே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். முதல் அரை மணி நேரம் சாமானிய மக்கள் தட்கல் டிக்கெட்டை பெற அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசர தேவைக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சாதாரண பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகள் இனி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தட்கல் முன்பதிவின் போது, பயணிகளின் செல்போனுக்கு ஆதார் மூலமாக ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி எண் சரிபார்க்கப்பட்ட பின்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
The post தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.