உலக அளவில் 220 கோடிப் பேருக்கு இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதில் வீட்டுக்குத் தேவையான தண்ணீரைச் சேகரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருக்கிறது. சிறுவர்களைவிடச் சிறுமியரே இரண்டு மடங்கு அதிகமாக வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவரும் பணியில் ஈடுபடுவதாக ஐ. நா. அவை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 21ஆம் நூற்றாண்டிலும் தண்ணீர் நெருக்கடி என்பது பெண்களுக்கான நெருக்கடியாகவே உள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை பெண்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சமூக வாழ்வையும் பாதிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியக் கிராமங்களில் தண்ணீரைத் தேடியே தங்களின் பெரும்பான்மையான நேரத்தைப் பெண்கள் செலவிடுகிறார்கள். இதனால் மனதளவிலும் உடலளவிலும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.