கூடலூர்: பாசனத்திற்கு தண்ணீர் திறப்புக்கு முன் 18ம் காவாயை சீரமைத்து தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப்பெரியாற்றிலிருந்து கூடலூர் வைரவன் கால்வாய் வழியாக 18ம் கால்வாய்க்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் உத்தமபாளையம், போடிநாயக்கனூர் தாலுகாக்களில் உள்ள 13 கிராமங்களில் சுமார் 54.90 கி.மீ தூரம் பயணித்து பாசனத்திற்கும், நிலத்தடி நீராதாரமாகவும் பயன்படுகிறது. இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் கோம்பை புதுக்குளம், தேவாரம் சின்னதேவி, பெரிய தேவியம்மன் கண்மாய் உள்ளிட்ட உள்ள 51 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
18ம் கால்வாய் மூலம் கூடலூர், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், தே.சிந்தலச்சேரி, சங்கராபுரம், வெம்பக்கோட்டை, பொட்டிப்புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி, போடி ஆகிய ஊர்களில் சுமார் 6839.25 ஏக்கர் மானாவாரி நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் தண்ணீர் திறப்பதற்கு முன், 18ம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ விவசாய அணி மாவட்ட தலைவர் காதர் முஹைதீன் யூசுப் கூறுகையில், ‘ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் 18ம் கால்வாய் திறக்கப்படும். ஆனால், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
கால்வாயை சீரமைக்காமல் தண்ணீரை திறந்ததால், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. பல கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. எனவே, நடப்பாண்டில் தண்ணீர் திறப்புக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், 18ம் கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என்றார். பெரியாறு-வைகை பாசன விவசாய சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ‘18ம் கால்வாயை சீரமைத்து தூர்வாருவதற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தூர்வாரப்படாமல் உள்ள 18ம் கால்வாயில் சீரமைத்து, பாசன வரம்பில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும், குளங்களும், கிராமமக்களும் பயன்பெறும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூல் கர்வ் என்ற பெயரில் முல்லைப்பெரியாறு அணையில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தான் நீர் தேக்க முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது 136 அடிக்கு மேல் உள்ள நீரை கேரளப் பகுதிக்கு உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் பகுதிக்கு 4 வே டேம் வழியாக 1867 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக சுமார் 1000 கனஅடி என 2,800 கனஅடி வரை தமிழக பகுதிக்கு திறக்க வழிவகை உள்ளது. ஆனால், தமிழக பகுதிக்கு நேற்று அதிகபட்சமாக 2480 கனஅடி தண்ணீரும், கேரளா பகுதிக்கு உபரிநீராக 363 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவுக்கு திறக்கப்படும் உபரி நீரையும் தமிழகப் பகுதிக்கு திறந்து வைகை அணையை நிரப்பி, 18ம் கால்வாயில் 2 முறை தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு திறக்கும்பட்சத்தில் ஒருபோக விவசாயமாக செய்யப்படும் 18ம் கால்வாய் விவசாயங்களுக்கு ஆண்டுக்கு இருபோக விவசாயம் செய்ய முடியும். எனவே ரூல்கர்வ் விதிமுறைப்படி பெரியாறு அணையிலிருந்து கேரளப்பகுதிக்கு விடப்படும் உபரி நீரை தமிழக பகுதிக்கு திருப்பி விட்டு முழுமையான பயன்பாட்டை நாம் அடைய முடியும்’ என்றார்.
The post தண்ணீர் திறப்புக்கு முன் 18ம் கால்வாயை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.