கடலூர்: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே கவணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(63). இவரது மனைவி கண்ணம்மாள். ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வராஜூக்கு வெங்கடேசன், அப்பு(32), ரவி என 3 மகன்கள். இதில் அப்பு பிஏ, எல்எல்பி., படித்துள்ளார். இவரும் விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- இந்திரா தம்பதியின் மகளான கல்லூரி மாணவி விஜயசாந்தியும்(23) 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்புவின் தந்தை செல்வராஜ் கடந்த 15ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடல், சொந்த ஊரான கவணை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. அப்போது அப்பு தனது காதலியான விஜயசாந்தியை வரவழைத்து, தந்தை சடலத்தின் முன் நின்று திருமணம் செய்தார். தாய் கண்ணம்மாள், தந்தை செல்வராஜூக்கு பாத பூஜை உள்ளிட்ட திருமண சடங்குகளை செய்து, தந்தையின் கையில் வைத்து தாலி எடுத்து கொடுக்க சொல்லி, அந்த தாலியை காதலி விஜயசாந்திக்கு கட்டி திருமணம் செய்து கொண்டதுடன், தாய், தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தந்தையின் சடலத்திற்கு முன்பு காதலிக்கு தாலி கட்டி மகன் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post தந்தையின் சடலத்தின் முன் காதலியை மணந்த மகன் appeared first on Dinakaran.