சென்னை: சென்னையில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் உலக வங்கி மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) நடத்திய ஆய்வில் மாநகர பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், 2008ம் ஆண்டில் மாநகர பேருந்துகளில் 26 சதவீதம் பேர் பயணித்த நிலையில் 2023ம் ஆண்டில் அது 16 சதவீதமாக குறைந்தது. இதே காலகட்டத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 25 சதவீதத்திலிருந்து 37.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் பகிரப்பட்ட சவாரிகள் கூட 4 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரயில் பயணங்களின் எண்ணிக்கையும், 5 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு வராமல் இருப்பது, பழைய வாகனங்கள் ஆகிய காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இடம் குறைவாக இருப்பதால் அதிக வாகனங்களுக்கு இடமளிக்க சாலைகளை அகலப்படுத்த முடியாது. எனவே, அதிகளவில் மக்கள் அழைத்து செல்லும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். போதுமான வசதிகள் வழங்கப்பட்டால், மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவார்கள் என போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் கூறியதாவது:
விரிவாக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதிகளில் 52 சதவீதம் பேர் இரு சக்கர வாகனங்களை விரும்புகிறார்கள், முக்கிய நகர பகுதிகளில் இது 34 சதவீதம் ஆகும். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப வழங்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் வீடு வரை செல்ல இணைப்பு வாகன வசதிகள் இல்லை. நகரம் பரப்பளவில் வளர்ந்துள்ளது, 2011ல் 1,500 சதுர கிலோ மீட்டரிலிருந்து இப்போது 5,900 சதுர கிலோ மீட்டராக நகர பகுதி அதிகரித்துள்ளது.
ஆனால் 2011ல் இருந்ததைப் போலவே 3,400க்கும் மேற்பட்ட பேருந்துகளை மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. 10 லட்சம் பேருக்கு 600 பேருந்துகள் என்ற ஒன்றிய அரசின் அளவுகோலைப் பொறுத்தவரை, சென்னை நகரின் 1.5 கோடி மக்கள்தொகைக்கு 9,000 பேருந்துகள் இருக்க வேண்டும். ஆனால், நகரத்தில் 10 லட்சம் மக்களுக்கு 220 பேருந்துகள் மட்டுமே உள்ளன. 2031-32ம் ஆண்டுக்குள் 6,457 பேருந்துகளை சேர்க்கவும், குறைந்தது 2,343 பேருந்துகளை மாற்றவும், பேருந்துகளுக்கு சாலைகளில் முன்னுரிமை பாதைகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒரு முனையத்துடன் மெட்ரோ ரயிலை ஒருங்கிணைக்கவும், புறநகர் ரயில் நிலையத்தை முனையத்துடன் இணைக்க ஸ்கைவாக்கை அமைக்கவும் ஆய்வு தீர்வுகளை வழங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். பேருந்துகளின் பயண கட்டணம் குறைவாக இருந்தாலும் பேருந்து நிறுத்ததில் இருந்து தங்கள் வீடுகளுக்கோ, அலுவலகத்திற்கு செல்ல இரண்டு மடங்கு அதிக செலவு ஆகிறது. மக்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் அமைப்பில் இணைக்கப்பட வேண்டும். இதை பொது-தனியார் கூட்டாண்மையில் முயற்சி செய்யலாம் என போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
The post தனிநபர் வாகன பயன்பாடு அதிகரிப்பு சென்னையில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது: உலக வங்கி ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.