தனிமை – இன்றைய காலக்கட்டத்தின் முக்கியச் சவாலாக மாறியுள்ளது. அண்மையில், மக்களிடம் தனிமை உணர்வு அதிகரித்துவருவது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2014 முதல் 2023 வரையில் உலக அளவில் ஆறு பேரில் ஒருவர் தனிமையை உணர்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையானது வயது, பாலினம், பொருளாதார நிலை என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும், தனிமை உணர்வானது மனநலத்தில் மட்டுமல்லாமல், உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதாக இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.