சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்பு மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அது வருமாறு:
* மிகவும் பழுதடைந்துள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனைகள் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிதாக கட்டப்படும்.
* தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அடையாறு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த சிகிச்சை மையமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் தரம் உயர்த்தப்படும்.
* ஏழை எளிய மக்களின் உடனடி நிதித்தேவையை பூர்த்தி செய்யும் ஆட்டினங்களின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தை மேலும் மேம்படுத்திட ‘தமிழ்நாடு மாநில வெள்ளாடு/செம்மறி ஆடு உற்பத்தி மற்றும் இனப்பெருக்க கொள்கை’ உருவாக்கப்படும்.
* பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு மனிதாபிமானத்துடன் பிராணிகளை நடத்துதல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் பங்களிப்புடன் ‘செல்லப்பிராணி பூங்கா’ ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
* தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் ஆதரவற்ற தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன், பிராணிகள் நல வாரியம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.
* கால்நடைகளுக்கு இடையிலான மோதல் மற்றும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் கையாளும் வழிமுறைகளுடன் ‘ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கான கொள்கை’ உருவாக்கப்படும்.
* மாவட்டந்தோறும் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைத்திட்டம்’ தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் செயல்படுத்தப்படும்.
* கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிக்கும் விவசாயிகளை கண்டறிந்து, அடையாளப்படுத்தி அவர்கள் பராமரிக்கும் கால்நடைகளுக்கு சிறந்த கால்நடைக்கான சான்று வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post தனியார் பங்களிப்புடன் பிராணிகள் நல வாரியம் மூலம் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.