விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தனுஷின் 55வது படத்தை இயக்க உள்ளார். தற்போது தனுஷ் இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு நிதிலன் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்க உள்ளார்.
இந்த நிலையில் தனியார் ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நிதிலன் சுவாமிநாதன் ‘தனுஷ் 55’ படம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக் கூடிய பலரை பற்றிய கதை இது. ஆனால் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை.