நெல்லை: மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் வலிந்து திணிக்க முடிவெடுத்து விட்ட ஒன்றிய அரசு, அதற்காக ஒன்றிய அரசின் அலுவலகங்களை ஒரு கருவியாக மாற்ற தொடங்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தபால் அலுவலகங்கள், ரயில்வே அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்தி எழுத்துக்களை வலுக்கட்டாயமாக எழுதிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தபால்துறையில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலத்தோடு இப்போது இந்தி எழுத்துகளும் இடம் பெற ெதாடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம், ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய தபால் நிலையங்களில் தலைமை அஞ்சலகம் என தமிழிலும், ஆங்கிலத்தில் இருந்த எழுத்துகளோடு இப்போது இந்தியும் இடம் பெற்றுள்ளது.
நெல்லை மாநகரத்தில் உள்ள பல வர்ணம் பூசப்பட்ட தபால் பெட்டிகளில் தமிழ்மொழி தவிர்த்து இந்தியும், ஆங்கிலமும் இடம் பெற்றுள்ளன. அதிலும் இந்தி வார்த்தைகளே அதிகம் இடம் பிடிக்கின்றன. ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையம் தொடங்கி, டவுன் ரதவீதிகள் என மாநகர தபால் பெட்டிகள் அனைத்தும் இந்திக்கு சிகப்பு கம்பளம் விரிக்கின்றன. இந்நிலையில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் கிராமங்களுக்கு செல்லும் தபால் பெட்டிகளில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் ‘தபால்’ என்னும் தமிழ் வார்த்தை மட்டும் சேர்க்கப்பட்டு, மற்றபடி ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
‘பாரதிய டாக்’ என்னும் இந்தி வார்த்தையும், ‘டாக் சேவா- ஜன சேவா’ என்னும் இந்தி வார்த்தைகளும் தபால் பெட்டிகளில் எழுதப்பட்டு நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் கண்ணில் படும்படி வைக்கப்பட உள்ளன. ஒன்றிய அரசின் உத்தரவை ஏற்றே அனைத்து தபால் பெட்டிகளிலும் இந்தி வார்த்தைகள் எழுதப்பட்டு வருவதாக தபால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post தபால் துறையில் இந்தி திணிப்பு மும்முரம் appeared first on Dinakaran.