விருதுநகர்: தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டி:எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து முற்றிலும் தவறான தகவல்களை கூறியுள்ளார்.
பரபரப்புக்காக தமிழ்நாட்டின் நிதி நிலை திவாலாக போகிறது என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை வைத்திருப்பது வருந்தத்தக்கது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை அரசு மீது வைக்க முடியும். அவர் ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளில் குறைவாக கடன் வாங்கியதாகவும், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாக கடன் வாங்கியதாகவும் அடிப்படை புரிதல் இல்லாமல் கூறுகிறார்.
2011ல் தமிழக பட்ஜெட் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடிதான். அப்போது உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் கோடி. இப்போது நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.31.55 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. வித்தியாசத்தை இந்த புள்ளிவிபரம் மூலம் அறியலாம். உள்நாட்டு உற்பத்தி மதிப்பை வைத்துதான் ஒரு மாநிலத்தின் கடன் வாங்கும் திறனை நிர்ணயிக்க முடியும்.
15வது நிதிக்குழு 2021-22ல் தமிழகம் 28.7 சதவீதம் கடன் வாங்கலாம் என்று தெரிவித்தது. ஆனால், 27.01 சதவீதம் மட்டுமே கடன் வாங்கப்பட்டது. இதேபோன்று, கடந்த 2022-23ல் நமக்கு பரிந்துரைத்தது 29.3 சதவீதம். ஆனால் வாங்கியது 26.87 சதவீதம். 2023-24ல் பரிந்துரைக்கப்பட்டது 29.1 சதவீதம்; வாங்கியது 26.72 சதவீதம். 2024-25ல் பரிந்துரைக்கப்பட்டது 28.9 சதவீதம்; வாங்கியது 26.4 சதவீதம் மட்டுமே. நிதிக்குழு பரிந்துரை செய்ததைவிட குறைந்த அளவில்தான் கடன் வாங்கியுள்ளோம்.
வரம்புக்குள்தான் நாம் கடன் வாங்கியுள்ளோம். கடன் வாங்குவதை தொகை அளவில் பார்க்காமல் புள்ளிவிவர அடிப்படையில் பார்க்க வேண்டும். தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. மேலும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிகமாக வரிவசூல் செய்துள்ளதையும் பழனிசாமியே ஒப்புக்கொண்டு தெரிவித்துள்ளார். இது நமது திறமையான நிதி மேலாண்மையை காட்டுகிறது. வணிக வரி சதவீதம் உயர்ந்துள்ளது. நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்படுகிறோம்.
மெட்ரோ திட்டத்திற்கு அமித்ஷாவை அழைத்து அடிக்கல் நாட்டினர். ஆனால் பணம் வரவில்லை. இப்போது தமிழக அரசு ரூ.26 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. மின்வாரியத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இருந்த நிதி சுமையை நாங்கள் சரிசெய்துள்ளோம். பேரிடர் நிதியாக மாநில நிதியை வழங்கியுள்ளோம். ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வரவில்லை.
கல்வித்துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி வர வேண்டியதை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.
ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு உயர்த்தி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு அதன் பங்களிப்பை உயர்த்தவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொது வெளியில் குற்றம்சாட்டுவதை தவிர்க்க வேண்டும். வடமாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் 15 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. 4 தென்மாநிலங்களுக்கும் சேர்த்தே ரூ.27,336 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் ரூ.31 ஆயிரத்து 39 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பது ரூ.7 ஆயிரத்து 57 கோடி மட்டுமே. தமிழக நிதிநிலையை நாம் திறமையாக கையாளுவோம். தமிழகத்திற்கு உரிய நிதி பகிர்வை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
* ‘பரந்தூர் விமான நிலையம் அவசியம் விஜய் மக்களை சந்திக்கலாம்’
அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறுகையில், ‘‘சென்னை விமான நிலையம் 1,300 ஏக்கர்தான் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 கோடி பயணிகள் வந்துசெல்கிறார்கள். இன்னும் 7 ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும். அடுத்த 10 ஆண்டில் 8 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பரந்தூர் விமான நிலையம் அவசியமாகிறது. உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். பரந்தூர் விமான நிலையம் தொழில்புரட்சிக்கு ஆதாரமாக அமையும்.
இதுதொடர்பாக மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். விஜய் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அரசிடம் தெரிவித்தால் அதை சரிசெய்வது குறித்து அரசு ஆராயும். ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக திட்டத்தை திமுக முடக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அவர்களது ஆட்சியில் மக்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துவிட்டு சென்றார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
* 15வது நிதிக்குழு 2021-22ல் தமிழகம் 28.7 சதவீதம் கடன் வாங்கலாம் என்று தெரிவித்தது. ஆனால், 27.01 சதவீதம் மட்டுமே கடன் வாங்கப்பட்டது.
* இதேபோன்று, கடந்த 2022-23ல் நமக்கு பரிந்துரைத்தது 29.3 சதவீதம். ஆனால் வாங்கியது 26.87 சதவீதம்.
* 2023-24ல் பரிந்துரைக்கப்பட்டது 29.1 சதவீதம்; வாங்கியது 26.72 சதவீதம்.
* 2024-25ல் பரிந்துரைக்கப்பட்டது 28.9 சதவீதம்; வாங்கியது 26.4 சதவீதம் மட்டுமே.
The post தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.