சென்னை: “தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமான தமிழகத்துக்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளில் தமிழகத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தினச் செய்தியில் கூறியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள செய்தி: “தமிழக சகோதர சகோதரிகளே, வணக்கம். பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த தருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 75 ஆண்டுகளில், நமது அண்டை நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் கூட, நமது ஜனநாயகம் மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஜனநாயக உணர்வு நமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது. பாரதம் தான் ஜனநாயகத்தின் தாய்நாடு.