சென்னை: “சிப்காட் வளாகங்கள் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். சிப்காட் விவகாரத்தில் பா.ம.க.வுக்கு இரட்டை நாக்கா? என்று கேட்கும் திமுகவுக்கு தமிழகத்தின் முதன்மைச் சிக்கல்களில் எத்தனை வாய்கள்? என்று கேட்டால் எண்ணுவதற்கு எண்கள் இல்லை.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்யிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்த கோரிக்கைக்கு எந்த தொடர்பு இல்லாமல் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,’’தருமபுரியில் சிப்காட் கேட்கும் பாமக திருவண்ணாமலையில் சிப்காட் கூடாது என்கிறது. அப்படியானால் பாமகவுக்கு இரட்டை நாக்கா?” என்று வினா எழுப்பியுள்ளார். எத்தனை முறை பதிலளித்தாலும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாத அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.