சென்னை: வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் வரும் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவியது. இதனால், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. தற்போது, வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று (ஏப்.2) முதல் வரும் 5-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.