தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.