சென்னை: தமிழகத்தில் சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தி.நகர் பவர் ஹவுஸ் அருகில் உள்ள காமராஜர் காலனியில் தமிழக பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. உறையூரில் குடி தண்ணீரில் கழிவு நீர் கலந்து ஒரே பகுதியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி தண்ணீரை கொடுப்பதற்கு கூட ஸ்டாலின் அரசால் முடியவில்லை. மக்கள் மீது கவனம் செலுத்தாமல் தேவையில்லாத விஷயங்களில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. ஆளுநரை தபால்காரர் என்கிறார்கள். அப்படியென்றால், திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது, ஆளுநரிடம் ஏன் கோரிக்கைகளை வைத்தார்கள்.