துக்கமோ, துயரமோ, இன்பமோ துன்பமோ ‘சாப்புட்டு அப்புறம் எதையும் பாத்துக்கலாம்’ என்ற மனநிலை மக்கள் மனதில் பரவலாக வந்துவிட்டது. குறிப்பாக பிரியாணி என்றால் “எமோஷன்” என்றாகிவிட்டது. இதனாலேயே பல புதிய பிராண்டுகள் பிரியாணிக்காக உருவாகி வருகின்றன. சமூக வலைதளங்களின் தாக்கமும் ஒரு காரணமாக இருந்தாலும், விதவிதமான, தரமான பிரியாணியை கண்டுப்படித்து யூடியூபர்கள் தொடர்ந்து வீடியோ போடுவதால் இளைஞர்கள் அதைச் தேடி சென்று அந்த பிரியாணியை சாப்பிடும் வழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டனர். தமிழகத்தில் ஓர் ஆண்டுக்கு பிரியாணி மட்டும் ரூ.10,000 கோடிக்கு விற்பனையாவதாக தகவல் வெளியாகி, அனைவரையும் வாயில் கை வைக்கச் செய்துள்ளது. குறிப்பாக தமிழத்தின் தலைநகர் சென்னைதான் பிரியாணி வர்த்தகத்தின் மையமாக விளங்குகிறது என்றால் ஆச்சரியமில்லை.
தமிழகத்தில், பிரபலமாக இருக்கும் பெரிய பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு வணிகம் நடப்பதாகவும், பதிவு செய்யப்படாத சிறு கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ரூ.7,500 கோடி அளவுக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பிரியாணி விற்பனையில் சென்னையில்தான் பிரியாணி அதிகமாக விற்பனையாகி உள்ளது. மாநிலத்தின் மொத்த பிரியாணி வணிகத்தில் சுமார் 50% பங்களிப்பை சென்னை மட்டுமே வழங்குகிறது.