சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வருகின்றனர். உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழகத்தில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.