சென்னை: தமிழகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேர்காணல் மூலம் அவசரகதியில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முடிவா ? தமிழகத்தில் நேர்காணல் (Walk In Interview) மூலம் 207 மகப்பேறு மருத்துவர்கள் உட்பட 658 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற திடீர் அறிவிப்பு அரசு மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதனையும் மீறி நேர்காணல் மூலமாக மருத்துவர்களை நியமிக்க முடிவு செய்திருப்பது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தற்போது நேர்காணல் முறையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? என மருத்துவ சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன. எனவே, மகப்பேறு மருத்துவர்கள் உட்பட சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலமாக நியமனம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.