தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மார்ச் 22-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.