சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக செப்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காமலேயே அரசு வழங்கும் தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450 என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2405 என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.